இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக் கம்பனிகளுக்கு ஒருவார காலம் அவகாசம் – அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020

தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுக்கு ஒருவார காலம் வழங்குவதற்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தீர்மானித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்தே அமைச்சர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின்போது, தோட்டக் கம்பனி சம்மேள பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில் – தொழிலாளர்கள் நாளாந்தம் மேலதிகமாக 2 கிலோ கொழுந்து பெற்றுத்தர வேண்டும். அத்துடன் தொழிலாளர்கள் தொழிலில் இருந்து விட்டுச்செல்லும்போது வழங்கும் தொழிலாளர் பணிக்கொடையை வழங்குவதற்கு அவர்கள் போதுமானளவு நாளாந்த கடமையை மேற்கொள்வதில்லை.

அதனால் தொழிலாளர்கள் அனைவரும் வருடத்துக்கு 180 நாள் தொழிலில் ஈடுபட்டிருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றனர்.

இதன்போது தோட்டத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கருத்து தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட்டே ஆகவேண்டும். தேயிலைக் கூடையின் பாரம் மற்றும் தொழிற்சாலையில் அகற்றப்படுவதாக தெரிவித்து தொழிலாளர்களால் பறிக்கப்படும் கொழுந்தில் குறைப்பு செய்வது நியாயம் இல்லை என குறிப்பிட்டனர்.

இவர்கள் இருதரப்பினரது கருத்துக்களை ஆராய்ந்து அமைச்சர் தெரிவிக்கையில், நாளொன்றுக்கு மேலதிகமாக ஒரு கிலோ கொழுந்து வழங்குதல் மற்றும் வருடத்துக்கு 180 நாள் தொழில் செய்யவேண்டும் என்ற முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை. எந்த நிலைமையின் கீழாவது தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளம் ஆயிரம் ரூபா ஆகவேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் எந்தக் காரணம் கொண்டு மாற்றமுடியாது.

அவ்வாறு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கமுடியாத கம்பனிகள் இருக்குமாக இருந்தால், அந்த தோட்டங்களை மீண்டும் அரசாங்கத்துக்கு வழங்கவேண்டும். அதன் பிரகாரம் இந்த தோட்டங்களை அரசாங்கத்தினால் அல்லது வேறு முகாமைத்துவ நிறுவனம் ஒன்றினூடாக நடத்திச்செல்ல அரசாங்கம் தயார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மின் கட்டணச் சலுகை வர்த்தகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீ...
நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்போவதில்லை - நிதி அமைச்சர் பசில் உறுதிபடத் ...
ஆசிரியர்களுக்குரிய மனித உள்ளார்ந்த வளம் தொடர்பான பயிற்சி தேவை - யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர்...