மேல் மாகாணத்திற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு – ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Sunday, November 1st, 2020

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நவம்பர் 9ஆம் திகதி காலை 5மணி வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்பொருட்டு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயலனியின் தலைவரும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னதாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் வேறு பகுதிகளில் இருந்து வருகை தரவோ, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவோ முற்றாக  தடை  விதிக்கப்பட்டுள்ளதாகவும் சவேந்திர சில்வா  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்கு நாளை  காலைமுதல் நவம்பர் 9ஆம் திகதி அதிகாலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து  கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராணுவத் தளபதி  கூறியுள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட 68 பொலிஸ் பிரிவுகளில் முன்னதாக  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவுமுதல் மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: