மேலும் இரு வாரங்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள் – ஜனாதிபதியிடம் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Sunday, June 13th, 2021

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை,எதிர்வரும் ஜுன் மாதம் 14 ஆம் திகதிமுதல் தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு அமுல்படுத்துமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு இந்த சங்கம் எழுத்துமூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. நாட்டில் இதுவரை அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாக, கொவிட் பரவல் குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், பயணக் கட்டுப்பாட்டை உடனடியாக தளர்த்தும் பட்சத்தில், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கக்கூடும் எனவும் அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறாத வகையில், பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் அந்த சங்கம் கோரியுள்ளது.

அத்துடன் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியில், திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களை அண்மித்த பகுதிகளில் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என இலங்கை வைத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோன்று. கொவிட் பரவல் அதிகரித்துள்ள நாடுகள் மற்றும் வீரியம் கொண்ட வைரஸ் பரவிவரும் நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வர வேண்டாம் எனவும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: