முறைப்பாடு அளித்தால் லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர உறுதியளிப்பு!

Thursday, September 16th, 2021

இரண்டு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இரமச்சர் ரத்வத்த நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்.

அவர் மதுபோதையில் தனது நண்பர்கள் குழுவுடன் சிறை வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் அவர் அனுராதபுரம் சிறையில் இரண்டு கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இது தொடர்பாக முறைப்பாடு அளித்தால், சம்பவங்கள் குறித்து அவருக்கு எதிராக தனது அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களம் தனது அமைச்சகத்தின் கீழ் வருவதாகக் கூறிய அவர், சிறை வளாகங்களுக்குள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றுமு; தெரிவித்துள்ளார்.

மேலும் “அவர் பயன்படுத்திய துப்பாக்கி, உரிமம் பெற்றதாக நான் நினைக்கிறேன். எவ்வாறாயினும், இந்த சம்பவங்கள் தொடர்பாக யாராவது முறைப்பாடு அளித்தால், சட்டப்படி நாங்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும், ”என்று அமைச்சர் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: