மீள் குடியேற்றாவிடின் அத்துமீறி நுழைந்து மீள்குடியேறுவோம் – வலி வடக்கு மக்கள் அரசுக்கு எச்சரிக்கை!

வலிவடக்கிலுள்ள சொந்த நிலங்களில் தங்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் தாம் அத்துமீறி நுழைந்து மீள்குடியேறவுள்ளதாக வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றையதினம் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்பாடி விருந்தினர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பை நடாத்திய வேளையே மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வலிவடக்கு மீள்குடியேற்ற மக்கள் ஒன்றியப்பிரதிநிதிகள் மேலும் தெரிவித்ததாவது கடந்த டிசம்பர் மாதம் நலன்புரி முகாமுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வலிவடக்கு மக்களை ஆறு மாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது ஐந்து இடங்களை கையளிக்கமுடியாது எனக்கூறப்பட்டுள்ளது. அத்துடன் மீளக்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு 2பரப்பு காணியும் கவர்ச்சியான சலுகைகளும் நட்டஈடுகளும் தருவதாக கூறுகின்றனர். ஐ.நா. பொதுச்செயலர் யாழ்ப்பாணம் வந்தபோது மீளக்குடியேற்றப்படவேண்டியமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுினும் பான்கிமூன் மக்களை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டார்.
எனவே இனியும் அரசியல்வாதிகளை நம்பத் தயாரில்லை. நாம் எமது சொந்த மண்ணுக்கு செல்வதாக தீர்மானித்துள்ளோம். பலாலி அந்தோனியார் ஆலய எல்லைக்குள் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அங்கு கொட்டகைகள் அமைத்து குடியேறுவதென தீர்மானித்துள்ளோம்.
எனவே எமது இந்த செயற்பாட்டிற்கு மீள்குடியேற்ற மக்கள் சார்பில் இயங்கும் அமைப்புகள்,யாழ்.பல்கலைக்கழகமாணவர்கள் பல்கலைக்கழக சமூகத்தினர் உட்படபொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழை்பு வழங்கவேண்டுமெனத் தெரிவித்தனர்.
Related posts:
|
|