மிளகாயை சந்தைப்படுத்தாது விதைகளைப் பெற நடவடிக்கை – மாவட்ட விவசாயப்பிரிவு!

Thursday, June 13th, 2019

மிளகாய்ச் செய்கையை மேற்கொண்டு அதனை நேரடியாகச் சந்தைப்படுத்துவதை விடவும் மிளகாய் விதைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மிளகாய்ச் செய்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதற்குத் தேவையான தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தூவல் நீர்ப்பாசனக் கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மிளகாய்ச் செய்கை மேற்கொண்டு அதனை மிளகாயாக சந்தைப்படுத்துவதிலும் பார்க்க அதில் இருந்து சிறந்த விதை இனங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு விதைகளைப் பெற்றுக் கொண்டு அதிக ஏக்கரில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும். விதைகளைச் சேமித்துப் பாதுகாப்பதன் மூலம் தேவையான நேரத்தில் அதனை விதைக்க முடியும். சிறப்பான மிளகாய் இனங்களைப் பயிர் செய்து அதன் விதைகளைச் சேமிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்ல இன மிளகாய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அனலைதீவுப்பகுதியில் மிளகாய்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்பிரதேசம் தனி ஒரு தீவாக இருப்பதால் நோய்த் தொற்று குறைவாகவும் வேறு இனங்கள் பயிர்களில் கலக்காத தன்மையும் காணப்படுகிறது. கால் ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் மிளகாய் விதைகள், தூவல் நீர்ப்பாசனம், பாதுகாப்பு வலைகள் என்பன 19 பேருக்கு வழங்கப்பட்டன. இந்த முறை விளைச்சல் மிகச் சிறப்பாக உள்ளது.  சுமார் 2 ஆயிரம் கிலோகிராம் மிளகாய் விதை உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: