மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

கம்பஹா – மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி இதுவரை அங்கு அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1022 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 1,115 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மினுவங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் கம்பஹா பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தற்போது அப்பகுதியில் தங்கியிருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் மாலை 4 மணிக்கு முன்னர் அருகில் உள்ள இடங்களுக்கு வருமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|