மாதம் ஒரு இலட்சம் சம்பாதித்தால் வருமான வரி செலுத்தவேண்டும்!

மாதாந்தம் ஒரு இலட்சத்துக்கு அதிகமாக சம்பளம் பெறுவர்கள், வரி செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி கோப்பு இலக்கம் புதிதாக அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் கோடிக் கணக்கில் உழைக்கிறார்கள். தனியார் மருத்துவர்கள், சட்டத்தரணிகளும் அதிக வருமானம் பெறுகின்றனர். இவர்கள் வருமானவரி செலுத்துகிறார்களா என்ற கேள்வி இருக்கிறது.
இந்த நிலையிலேயே புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டவரைவு கொண்டு வரப்படுகின்றது நாடாளுமன்றத்தில் உள்நாட்டு இறைவரிச் சட்டவரைவை நேற்றுச் சமர்ப் பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மக்கள் மீது சுமையேற்றுவதற்காகப் புதிய இறைவரிச் சட்டம் கொண்டு வரப்படவில்லை. மறைமுக வரியை குறைத்து நேரடி வரியை அதிகரிக்கும் வகையிலே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஒரு லட்சம் ரூபா மாத வருமானம் பெற்றுக் கொள்பவர்கள் வரி செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு இலக்கம் அறிமுகம் செய்யப்படவுள்ளது
வரிக் கோப்பு இலக்கம் உள்ள அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை. புதிய சட்டத்தினூடாக வரி செலுத்தாமல் ஏமாற்றும் நபர்களுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கப்படும் இந்தச் சட்டத்தினூடாக ஆண்டுதோறும் 45 பில்லியன் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாட்டை நேசிக்கும் அனைவரும் வரி செலுத்தி பொருளாதாரத்தில் பங்காளியாக வேண்டும்
நாட்டு மக்களில் 60 சதவீதமானவர்களே வரி செலுத்துகின்றனர். நாட்டின் மொத்த வருமானத்தில் 53 சதவீதத்தை மொத்த சனத்தொகையில் 20 சதவீதமாக உள்ள செல்வந்தர்களே பெறுகின்றனர்.அவர்கள் ஈட்டும் வருமானத்திற்கு திருப்தியாக வரி செலுத்துவதில்லை. வரி செலுத்துவதில் கிரிகிஸ் தானை விட எமது நாடு பின்நிலை யிலேயே இருக்கிறது.
புதிய சட்டத்தினூடாக மறைமுக வரி குறைக்கப்பட்டு நேரடி வரி அதிகரிக்கப்படும். நேரடி வரி 20 வீதமாகவும், மறைமுக வரி 80 வீதமாகவும் தற்போது காணப்படுகிறது. இதனை 40 இற்கு 60 என்ற அடிப்படையில் மாற்றியமைப்பதே எமது நோக்கமாகும்.2020ஆம் ஆண்டாகும் போது மறைமுக வரி குறைக்கப்பட்டு நேரடி வரி அதிகரிக்கப்படுவதோடு வற் வரி வீதத்தை இதன்மூலம் குறைக்க முடியும்–என்றார்
Related posts:
|
|