மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க தொலைக்காட்சி, அலைபேசி என்ற இரு சாத்தான்கனையும் வீடுகளில் ஒழிக்கவேண்டும்!

Friday, December 8th, 2017

மாணவர்களிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள இரண்டு சாத்தான்களை ஒழிக்கவேண்டும். ஒன்று தொலைக்காட்சி மற்றயது அலைபேசி என வவுனியா தேசியக் கல்வியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

எதை எப்படி வாசிக்க வேண்டும் என்று புத்தகத்தில் உள்ளது. அவற்றைத் திருப்பித் திருப்பி வாசிக்க வேண்டும். விளங்கி வாசிப்பது ஞாபகத்தையும் மனனத்தையும் அதிகரிக்கும். இன்றைய பிள்ளைகளின் ஞாபகம் இன்மைக்குக் காரணம் வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதே. உரத்து வாசிக்கும் போது வேறு சிந்தனைகள் வராது. இது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

பிள்ளைகள் வீட்டில் உரத்து வாசிக்கவேண்டும். முன்னர் உரத்து வாசிப்பு என்று பாடம் இருந்தது. தற்போது ஆசிரியர் உரத்து வாசிக்கச் சொல்வதில்லை. உரத்து வாசிக்கும் போது முதற்தடவையிலேயே சரியான கிரகிப்பு ஆற்றலைப் பெற்றுக்கொள்ளலாம். பெரிய பெரிய சித்தாந்தங்களை எல்லாம் சொல்லிக் கொடுப்பதற்கு வாசிப்பு முறைகள் இருக்கின்றன. நாங்கள் அதைப் பின்பற்றுவதில்லை. எதனையும் இரசித்துப் படிக்கவேண்டும். படிக்கும் போது ஒரு சந்தோசம் வர வேண்டும். நயப்புணர்ச்சி வர வேண்டும். இதுவெல்லாம் வாசிப்பூடாகத்தான் வரும்.

இன்று வடக்கு மாகாணத்தில் கல்வியின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் மாலைவேளையில் வீட்டில் படிப்பதற்கு பிள்ளைக்கு நேரம் இல்லை. ரியூசனுக்குப் போக வேண்டும். இதுவும் எங்களுடைய கல்வி வீழ்ச்சிக்கு காரணம்.

வீட்டில் பிள்ளைகளை வாசிக்க ஊக்கப்படுத்துவதில்லை. நல்ல நூல்கள் வாங்கிக் கொடுப்பதில்லை. நல்ல நூலகங்களுக்கு அனுப்புவதில்லை. ஆசிரியர்கள் வாசிப்பை ஊக்குவிக்கும் மனப்பாங்கில் இல்லை. பெற்றோரும் அதற்கு சாதகமாக இல்லை. இவற்றை எல்லாம் செய்யாது விட்டுவிட்டு பிள்ளை ஒன்றும் செய்யவில்லை, முன்னர் போல் இல்லை என்று எல்லோரும் சொல்கின்றார்கள். பிள்ளைகள் எல்லாக்காலத்திலும் அப்படித்தான். முன்னர் போல் ஆசிரியர்கள் இல்லை, தாய் தந்தை இல்லை. இது தான் பிரச்சினை. இதை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

Related posts: