மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 806 பேர் மேன்முறையீடு!

Sunday, February 17th, 2019

பெரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 1,242 பேரில் 806 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டிலிருந்து தரமான புதிய தூக்குக் கயிறைக் கொள்வனவு செய்வதற்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தூக்குமேடைக்குப் பயன்படுத்தப்படும் கயிற்றின் தரம் தொடர்பில் சிக்கல் காணப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து புதிய தூக்குக் கயிற்றைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 25 பேர் பாரதூரமான விதத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 30 சிறைச்சாலைகள் காணப்படுகின்றபோதிலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான வசதிகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் மாத்திரமே காணப்படுகின்றன.

தூக்குமேடைக்குத் தேவையான ஏனைய உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: