மக்கள் சேவை செய்வது தொடர்பில் ஈ.பி.டி.பிக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை – மாநகரசபையில் தர்சானந்தை வாயடைக்கச் செய்த முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

மக்களுக்கான சேவையை எவ்வாறு செய்யவேண்டும் என்பது தொடர்பில் தத்தமது வாய்க்கு வந்தவாறு சுயநலன்களுக்காக வாய்சவாடல் விடாது அதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து ஏனைய சக கட்சிகள் கற்றுக்கொள்ளவேண்டும் என யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் மாநகரசபையின் புதிய ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வேலைத்திட்டங்கள் தொடர்பில் நேரடியாக வெற்றியீட்டிய வட்டாரங்களின் உறுப்பினர்கள் அதே வட்டாரங்களைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன என்றும் இதை முதல்வர் கவனத்தில் கொள்வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகரசபை உறுப்பினரான ஜெயந்தி தெரிவித்தார்.
இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்று சிறிதுநேரம் அமைதியின்மை நிலவியது. இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த் குறுக்கிட்டு மக்கள் சேவை தொடர்பில் சுயநலன்களுடன் கூடியதாக தனது கருத்துக்களை முன்வைத்தார்.
தர்சானந்தின் கூற்றை ஏளனத்துக்குரிய கூற்று எனத் தெரிவித்த யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மக்கள் சேவையின் போது எமது கட்சியினர் பனி, மழை, வெய்யில் கால நேரம் என்பதை கடந்து கடந்த காலங்களில் உழைத்து மக்களை சிறந்த நிலையில் வாழவைத்தவர்கள். அதுவும் கடும் யுத்தத்தை எதிர்கொண்டு இருந்த எமது மக்களை மீளவும் இயல்பு நிலைக்கு கொண்டுவர நாம் எவ்வாறு உழைத்தோம் என்பதை கடந்தகால வரலாறுகள் சாட்சி பகர்கின்றன.
எமக்கு மக்கள் சேவை தொடர்பில் எவரும் கற்றுத்தரத் தேவையில்லை. எமது கட்சியின் மக்கள் சேவை தொடர்பில் மக்களுக்கு மட்டுமல்ல நன்மையடைந்த உங்களுக்கும் நன்கு தெரியும்.
அந்தவகையில் எப்படி மக்கள் சேவை செய்யவேண்டும் என்பது தொடர்பில் எம்மைப்பார்த்து இனியாவது கற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
முன்னாள் யாழ் மாநாகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் குறித்த கருத்தையடுத்து தர்சானந்த் நிலை தடுமாறி மௌனமாக தனது இருக்கையில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|