பொருளாதார சவால்கள் இருந்தாலும் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையாது – சுகாதார அமைச்சர் நம்பிக்கை!

Tuesday, January 3rd, 2023

நாட்டில் பொருளாதார சவால்கள் இருந்தாலும் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையானது ஏனைய அனைத்துத் துறைகளையும் விஞ்சி நிற்கும் ஒரு பாரிய வலையமைப்பாகத் திகழ்வதாகத் தெரிவித்த அமைச்சர், இந்த வருடத்தில் சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் புத்தாண்டின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அண்மைக் காலத்தில் சுகாதாரத் துறை எதிர்கொண்ட மிக முக்கியமான சவாலானது கொவிட் -19 அச்சுறுத்தலாகும். தற்போது சுகாதாரத் துறையானது வைரஸை விட மிகப் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொவிட் வைரஸால் வெற்றி பெற்றுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி மிகவும் சிக்கலானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தின் பின்னர் ஜனாதிபதி சுகாதார துறைக்கு முன்னுரிமை அளித்துள்ளார்.

சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் கலந்துரையாடல் மூலம் தீர்க்கப்பட்டு வருவதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எவ்வாறு சமாளித்தார்களோ அதேபோன்று பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க வேண்டும்.

அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பு எதிர்வரும் வருடத்தில் முக்கியமானது என்றும் சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது போல் சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது எளிதானது அல்ல என்றும், மருந்துகளை இறக்குமதி செய்யும் செயல்முறை மிகவும் சிக்கலானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: