பொனறுவையில் அரிசி ஆலை உரிமையாளர்களின் வசமிருந்த பெருந்தொகை அரிசி அரசுடமையானது – சதொச ஊடாக விநியோகிக்க நடவடிக்கை!

Thursday, September 9th, 2021

பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலைகளின் உரிமையாளர்களிடமிருந்த பெருந்தொகையான அரிசியை அரசுடமையாக்கும் நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயக அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஆறு அரிசி ஆலைகளில் காணப்பட்ட அரிசி தொகைகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கை, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

பொலன்னறுவை பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படாத அரிசித் தொகை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் கையகப்படுத்தப்பட்டதை அடுத்து, அவற்றை சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த அரிசித் தொகை, நுகர்வோரான பொதுமக்களை உடனடியாகப் சென்றடைய வேண்டும் என்பதே, அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அரசாங்கத்தால் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நியமிக்கப்பட்டதை அடுத்து, போதுமானளவு உற்பத்தித் தொகையை பேணவும் எவ்விதப் பற்றாக்குறையுமின்றி சந்தைக்கான அரிசியை விநியோகிப்பது தொடர்பிலும், அரிசி ஆலை உரிமையாளர்களுடன், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், அவர்கள் இணங்கிய விதத்தில் நடந்துகொள்ளாமையால், அந்த வரிசி ஆலைகளில் காணப்பட்ட அரிசித் தொகையைக் கையகப்படுத்தி விநியோகிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் பதாதைகளுக்கு தடை - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில்...
இலங்கையின் விவசாயத்துறையை வளப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - அமைச்சர் மகிந்த அமரவீரவிடம...