பொது நினைவுத் தூபிக்கு மட்டுமே அனுமதி: சுயேட்சைக் குழுவின் தீர்மானத்தை தூக்கி எறிந்தது வல்வெட்டித்துறை நகரசபை!

Monday, January 28th, 2019


குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களுக்கே நினைவுத்தூபி அமைக்கப்படவேண்டும் என வல்வெட்டித்துறை நகரசபையில் சுயேட்சைக்குழு உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தவிசாளரது விஷேட வாக்களிப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டு யுத்தத்தில் இறந்த அனைத்து போராளிகளுக்கும் நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் யூலை மாதம்; 18 ஆம் திகதி வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குமரப்பா புலேந்திரனது நினைவுத் தூபியை புனரமைக்க வேண்டும் என்ற தீர்மானம் சபையில் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்பிரேரணை பெரும்பான்மையானோரால் ஏற்றுக்கொள்ளப்படாமையால் அது குறித்த ஒரு தரப்பினருக்கு மட்டுமாதல்லாது யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து இயக்கங்களினதும் போராளிகளையும் நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டு சபையில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் முகமாக சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 9 உறுப்பினர்களது ஆதரவுடன் மீண்டும் சபைக்கு குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என பிரேரணை கொண்டுவந்திருந்தனர்.
அதனடிப்படையில் இன்றையதினம் குறித்த பிரேரணை சபை விவாத்திற்கு வந்த நிலையில் சுயேட்சைக்குழு – 04, தமிழ் தேசிய முன்னணி – 02, தமிழர் விடுதலை கூட்டணி 01 மற்றும்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
குறித்த பிரேரணைக்கு ஏதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு 06, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 02 என எட்டு உறுப்பினர்களும் வாக்களித்திருந்த நிலையில் பிரேரணை சம நிலையில் தீர்மானமெடுப்பதில் பெரும் இழுபறி நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் தவிசாளருக்கு உள்ள விசேட அதிகாரம் முறைமையூடாக அவரது மேலதிக விசேட வாக்கு பிரேரணைக்கு எதிராக அளிக்கப்பட்டதால் குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்துடன் பொதுத் தூபியே அமைக்கப்ட வேண்டும் என்ற தீர்மானம் மீண்டும் சபையால் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Related posts: