புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்களை அடையாளப்படுத்துங்கள் – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!
Thursday, February 3rd, 2022புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்கள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் ‘தம்பபவனி’ காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இரண்டு பெரிய பருவக்காற்றுகளையும் எதிர்கொள்ளும் மன்னார் தீவின் தெற்குக்கடற்கரைப் பிரதேசத்தில், 13 கிலோ மீற்றர் நீளம் மற்றும் 150 ஹெக்டெயார் நிலப்பரப்பு, ‘தம்பபவனி’ காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
90 மீற்றர் உயரத்திலான விசையாழிகளுடன் கூடிய முப்பது கோபுரங்களை இந்த மின்னுற்பத்தி நிலையம் கொண்டுள்ளது. ஒரு கோபுரத்திலிருந்து 3.45 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
அத்துடன் இந்நிலையத்தின் மூலம் மொத்தமாக 103.5 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இதில் ஓர் அலகு மின்னுற்பத்தியை மேற்கொள்ள, 8 ரூபாவுக்கும் குறைவான தொகையே செலவாகுவதாக, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை ‘தம்பபவனி’ காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக, மேலும் 50 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அதன் முன்னேற்றம் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்கள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|