புங்குடுதீவு குழாய்வழி நீர்வழங்கலை மீண்டும் உயிரூட்ட வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் கோரிக்கை!

Tuesday, October 30th, 2018

வேலனை பிரதேசசபையின் நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட புங்குடுதீவு  உப பிரதேச சபையினால் 1972 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையாக 40 வருடங்களாக குழாய் வழியாக வழங்கப்பட்டுவந்த நீர் வழங்கலை  மீண்டும் சீராக வழங்க வேலணை பிரதேச சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேலணை பிரதேச சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் செந்தூரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் உபதவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

 கடந்த காலத்தில் புங்குடுதீவின் 02ஆம் 03ஆம் 10ஆம் 11ஆம் 12ஆம்  வட்டாரங்களை உள்ளடக்கிய மக்களுக்கான நீர்த்தேவையின் ஒரு பகுதியை  இது நிறைவேற்றிவந்தது.

ஆனாலும் நீர் வழங்கல் திட்டத்திற்கென புங்குடுதீவு கிழக்கு 10ம் வட்டாரம் J/25 கிராமசேவகர் பிரிவில் உள்ள கண்ணகி அம்மன் கோவிலுக்கு முன்பாக உள்ள காணியில் புங்குடுதீவு உப அலுவலகத்திற்கு இரண்டு கிணறுகள் உள்ளன. இக் கிணறுகளும் பொது இடங்களில் உள்ள 8 நீர் தொட்டிகளும் கடந்த பல வருடங்களாக பராமரிப்பின்றி சிறு சிறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றது.

அத்துடன் நீர்வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட டீசலில் இயங்கக்கூடிய இரண்டு நீர் பம்பிகளும் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. ஆனால் நிலத்துக்கு கீழ் உள்ள குழாய் வழியாக நீர் செல்வதற்கான தடைகள் எதுவும் காணப்படவில்லை. கிணற்று நீரும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.

இந் நிலையில் தற்போது நீர் வழங்கல் திட்டம் இடை நிறுத்தப்பட்டது தொடர்பிலும், நீர் பிரச்சனை தொடர்பிலும்  நான் பிரதேச சபையில் பிரேரணை ஒன்றினை முன்வைத்தேன் .

அப்பிரேரணையானது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எமது சபையின் சில உறுப்பினர்கள் இத்திட்டத்தின் நன்மைகள் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாது இதனால் ஏற்படும் செலவுகளை மட்டுமே பெரிதாக எடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால் இதற்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் எனது சொந்தப்பணத்தில் இருந்து செலவு செய்வதாகவும் அதற்கான அனுமதியினை மட்டுமே தந்துதவுமாறும் கேட்டுக்கொண்டேன். அதற்கு சபையில் பெரும்பான்மையாக ஆதரவு கிடைத்துள்ளது.

இது சம்மந்தமான தீர்மானம் இல – 03/30.05.2018 இத் தீர்மானத்தின் படி என்னால் எடுக்கப்பட்ட முதல் வேலையாக புங்குடுதீவு உப அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கிணறும், இயந்திரமும் , இயந்திர நிலையமும் ஆய்வு செய்யப்பட்டது.

அதில் உள்ள இயந்திரம் இரண்டும் பழுதடைந்து விட்டது. அதனை திருத்துவதற்கு உண்டாகும் செலவிற்கு பதில் புதிய இயந்திரத்தினை கொள்வனவு செய்யலாம் என முன்னாள் இயந்திர இயக்குநராக செயற்பட்ட திரு மு.செல்வரெத்தினம் மற்றும் தற்போதைய இயந்திர இயக்குநர் திரு நாகதர்சன் என்பவரும் தெரிவித்தார்கள்.

பழுதடைந்த இயந்திரத்தினை உற்பத்தி செய்த நிறுவனமான ஜினசேன பிறைவேட் லிமிட்டெட் என்ற கம்பனியுடன் தொடர்பு கொண்டு அதன் யாழ்ப்பாண கிளையில் விலை, அதன்விபரம் பற்றி கேட்டு அறிந்தேன்.

பொது இடங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள் 8 இவற்றையும் சிறு திருத்தவேலைகள் செய்வதன் மூலமாக புனரமைக்க முடியும். 8 தொட்டிகள் கொத்தி சீமெந்து பூசுவதற்கும் நீர் கசிவு ஏற்படாமல் இருப்பதற்கும்

தண்ணீர் ரைப் (பித்தளை) கொள்வனவு செய்தல் – நிறம் தீட்டுவதற்கு – குழாய் பொருத்துக்கள் அடைப்புக்கள் வால்வுகள் கொள்வனவு செய்தல்: இரும்பு குழாய்கள் கொள்வனவு செய்தல் – பிளாஸ்ரிக்குழாய்கள் கொள்வனவு செய்தல் – மற்றும் பொருத்து வேலைகளுக்காக உண்டாகும் செலவுகள். உட்பட பிரித்தானியா  புங்குடுதீவு மக்கள் நலன் புரிச்சங்கம் புங்குடுதீவுக்கு பல நலத்திட்டங்களையும் அபிவிருத்திப்பணிகளை திறம்பட ஆற்றி வருவதுடன், எமது ஊரின் பெருமைகளையும் வரலாற்று பொக்கிஷங்களையும் நீர் நில வளத்தினையும் பாதுகாத்து வருவதற்கு என்றும் எம்முடன் துணை நிற்கும் என்ற எதிர்பார்ப்புடன். நலன் விரும்பிகளாகிய உங்களிடத்தில் ஊர்மக்கள் சார்பில் எனது கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.

இத்திட்டத்திற்கு உங்கள் நிதிப்பங்களிப்பு கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் வறட்சி காலங்களில் மக்களுக்கு அன்றாட தேவைகளுக்கான நீர் வசதிகளை குறைந்தது 30சத வீதமாவது பெற்றுக்கொடுக்க கூடியதாக இருக்கும்.

நீண்டதூரம் சென்று கண்ணகி அம்மன் கோவில் நீர் எடுத்து வந்த 11ம் 12ம் வட்டார மக்கள் பலரும் தல்லையப்பற்று மற்றும் அம்மா கடை சந்தியில் இருக்கும் தொட்டிகள் மூலமாகவும் வீராமலையில் இருப்பவர்கள் இராஜேஸ்வரி வித்தியாலத்திற்கு பக்கத்திலும் கோட்டைகாடு, மண்காடு பிரதேச மக்கள் புங்குடுதீவு மதுபான நிலையத்திற்கு அருகில் உள்ள தொட்டியிலும் அதிகளவிலான நீரினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது மட்டுமன்றி 5 வட்டாரத்தில் உள்ள  மக்கள் அவர்களது வீடுகளுக்கு நீரினை குழாய் மூலமாக பெற்றுக் கொள்ள முடியும் . மற்றயவர்கள் பொது தொட்டிகள் மூலமாக பெற்றுக்கொள்கின்றனர்.

இவற்றுடன் விரயமாகின்ற நீரினை கால்நடைகள் ஆவினங்கள் மற்றும் பறவைகள் அருந்துவதால் எமது ஊரின் கால்நடைகளுக்கும் போதிய நீர் வசதி செய்து கொடுக்க முடியும்.

எனவே தாங்கள் இத்திட்டத்தின் பயன் கருதி தங்களால் இயன்ற நிதிப்பங்களிப்பினை வழங்குவதன் மூலமாக எமது ஊருக்கு வேறு இடத்தில் இருந்து நீர் பெற்றுக்கொள்வதற்கான காலாகாலமாக உள்ள பிணக்கினை தீர்த்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: