சிறுமி கடத்தப்பட்டு கூட்டுவன்புணர்வு – வவுனியாவில் சம்பவம்!

Saturday, November 18th, 2017

முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட 16 வயதுச் சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கூட்டுவன்புணர்வு வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றது. வன்புணர்வின் பின்னர் சிறுமியை நகரில் உள்ள ஆள்களற்ற வீடு ஒன்றில் குற்றவாளிகள் அநாதரவாக விட்டுச் சென்றனர். ஒருவாறு நேற்று முன்தினம் வீடு வந்து சேர்ந்த சிறுமி உறவினர்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறையிட்டனர்.

சிறுமியின் தகவல்படி முதலில் இருவரைக் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த இருவரும் கொடுத்த தகவலின்படி மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி தனது வீட்டுக்கு அருகில் உள்ள முதன்மைச்சாலையில் பஸ்ஸைவிட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த சமயம் முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் கடத்தப்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மதிய நேரம் மாணவி தனித்துச் சென்றதைப் பயன்படுத்தி அவரைக் கடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அறிந்த உறவினர்கள் நேற்று வவுனியா பொலிஸில் முறையிட்டனர். அவர்கள் பொலிஸில் முறையிடச் சென்றிருந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்றிருக்கிறார். இதையடுத்து உறவினர்களால் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: