பிரதேச சபை தேர்தலில் கூட மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவது எதற்கு – ரங்கேஸ்வரன் கேள்வி!

Thursday, May 16th, 2024

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்  மக்களுக்கு வழி காட்டுவதற்கு முன்னர் மக்கள் ஆணையை பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் அதைவிடுத்து மக்களை பகடைகளாக பயன்படுத்தி பணப்பட்டி அரசியல் செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடாக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

தமிழ் கட்சிகள் சில எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களம் இறக்கப் போகிறோம் என ஆங்காங்கே கூடிப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்வதாக வாக்குறுதி கொடுத்து அபிவிருத்திக்கென பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளனர்.

மறுபுறம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை பொது வேட்பாளராக களம் இறங்க கேட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பின்னர் தான் அவ்வாறு கேட்கவில்லை என சுரேஷ் பதில் அறிக்கை வழங்கியதையும் ஊடகங்களில் பார்த்தேன்.

ஆனால் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் பிரேமச் சந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். குறிப்பாக பிரதேச சபை தேர்தலில் கூட அவரது அணியினரை மக்கள் முழுமையாக புறக்கணித்து ஓரங்கட்டி விட்டனர்.

இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஆணை கிடைத்தது வரும் நிலையில் மக்கள் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு எமக்கு மக்கள் ஆணையுள்ளது.

இந்நிலையில் இப்போது பொது வேட்பாளர் என்ற விடயத்தை கையிலெடுத்துள்ள தரப்பினர்  மக்களை குழப்பி பணப்பட்டி அரசியலை மேற்கொள்ள வா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்  மக்களுக்கு வழி காட்டுவதற்கு  முன்னர் மக்கள் ஆணையை பெறுவது அவசியம். அதைவிடுத்து மக்களை பகடைகளாக பயன்படுத்தி தொடர்ந்தும் பணப்பட்டி அரசியல் செய்யக்கூடாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: