பல்கலைக்கழக பட்டதாரிகள் இன்றுகூட அரசாங்க தொழில் வாய்ப்பையே எதிர்பார்த்து நிற்கிறார்கள் – இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் அமைச்சு செயலாளர் !

Monday, March 14th, 2022

2009 ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில்கூட அதற்கு அடிப்படையாக அமைந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டு விட்டனவா? என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜயகோன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய பல்கலைக்கழக இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்கிற தொனிபொருளில் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எம்பிலிப்பிட்டியவில் உள்ள தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 05 நாட்கள்  தலைமைத்துவ மேம்பாட்டு வதிவிட பயிற்சி முகாம் இடம்பெறுகின்றது.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் மேலும் தெரிவிக்கையில் –

1971 ஆம் ஆண்டு எமது நாட்டில் இளைஞர்கள் ஒரு கிளர்ச்சியை மேற்கொண்டார்கள்.  1983 இல் இளைஞர்களின் தலைமையில் ஒரு  சிவில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 87, 88 களில் தெற்கில் ஒரு ஆயுத கிளர்ச்சியை இளைஞர்கள் முன்னெடுத்தனர். 2009 ஆம் ஆண்டு சிவில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் நாடு எதிர்நோக்கி இருந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டு விட்டனவா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாட்டில் மீண்டும் ஸ்திர தன்மைக்கு  பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று நாம் பாரதூரமான கொவிட் 19 தொற்றுக்கு பின்னரும்  மோசமான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றோம்.  மோசமான அன்னிய செலாவணி தட்டுப்பாடு நீலவுகின்றது. அத்தியாவசிய பொருட்களை ஒரு கட்டத்துக்கு மேல் இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

நமது நாட்டுக்கு தேவையான வலு சக்தியை எம்மால் உற்பத்தி செய்ய முடிகின்றதா? தேவையான உணவை, தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்ய முடிகின்றதா? அன்னிய செலாவணியை கணிசமாக ஈட்ட கூடிய உற்பத்தி பொருளாதாரத்தை அடைந்து உள்ளோமா? இவற்றை எல்லாம் நாம் ஆராய்ந்து செயற்பட்டு இருப்போமானால் இன்றைய நெருக்கடிகளை சமாளிக்க முடிந்திருக்கும் என்பது எனது கருத்தாகும்.

எமது நாடு சுதந்திரம் அடைந்து 74 வருடங்களை கடந்து இருக்கின்றோம். ஆனால் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகீன்றபோது எந்த அளவில் அபிவிருத்தி அடைந்திருக்கின்றோம்? என்கிற கேள்வி கண் முன் நிற்கின்றது. எமது நாட்டின் அபிவிருத்தியை பின் தங்க செய்து வைத்திருக்கின்ற காரணிகள் அவசியம் அடையாளம் காணப்பட வேண்டும். அவற்றை துல்லியமாக அடையாளம் காணாமல் அபிவிருத்தியை அடைவது சாத்தியம் ஆக மாட்டாது.

இளைஞர், விளையாட்டு துறை அமைச்சு எதிர்நோக்கி வருகின்ற மிக முக்கியமான சவால் எந்தளவிலான தலைமைத்துவம் இளைஞர்களால் வழங்கப்பட முடியாமல் உள்ளது என்பதை அளவீடு செய்ய முடியாமல் இருக்கின்றது. 

பல்கலைக்கழக பட்டதாரிகள் இன்றுகூட அரசாங்க தொழில் வாய்ப்பையே நம்பி எதிர்பார்த்து நிற்கிறார்கள். எமது பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கம் செலுத்த கூடிய பொருளாதாரம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் பட்டங்களை பெற்றிருந்தும்கூட அவர்களின் அறிவை பயன்படுத்தி பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்கின்ற சூழல் இருக்கின்றதா? எமது வங்கிகள் அவ்வாறான தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி செய்ய தயார் நிலையில் உள்ளனரா? அரச நிர்வாகம் இவ்வாறான முயற்சிகளை வழிநடத்தி முன்னெடுக்க தயாராக உள்ளதா?

பல்கலைக்கழகங்களில் தேவையான அளவுக்கு பிரயோக அறிவு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றதா? பரீட்சைகளில் சித்தி அடைகின்ற மட்டத்துக்குதான் மாணவர்கள் அறிவூட்டப்படுகின்றனரா? புத்தக அறிவை மட்டும் பெற்று பிரயோக அறிவு இல்லாமல் இருக்கின்றோமா? அரசியல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் நேரடியாக தாக்கம் செலுத்த கூடிய அளவுக்கு பங்காளர்களாக இளைஞர்கள் உருவாக்கப்பட்டு உள்ளார்களா?

இளைஞர்கள் இச்சவால்களை எல்லாம் வெற்றி கொள்ள வேண்டி இருக்கின்றது.  தாய்மொழிக்கு மேலதிகமாக சகோதர மொழியையும் இளைஞர்கள் கற்க வேண்டி உள்ளது.   அதே போல சர்வதேச மொழியிலும் வல்லமை பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: