பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர் இணையவாயிலாக தரவிறக்கம் செய்யுங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Saturday, October 10th, 2020

நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான, www.doenets.lk அல்லது நேரடியாக www.slexams.com எனும் தளத்திலிருந்து அதனை தரவிறக்கிக் கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித அறிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்துப் பாடசாலைகளுக்குமான பாடசாலை பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி அட்டைகள், அந்தந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள், அவர்களது முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நிலவும் கொரோனா நிலைமையைக் கருத்தில்கொண்டு, பரீட்சை நிலையங்களில் அதிபர்கள் அல்லது பிரதி அதிபர்கள் அல்லது சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர், பரீட்சை மண்டப மேலதிக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்கள், பரீட்சை நிலையத்தில் உரிய வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளுக்காக, சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து, அந்த நிலையங்களைக் கிருமி அழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவசியமான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

2020 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதிமுதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை, நாடு முழுவதிலுமுள்ள 2 ஆயிரத்து 648 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.

இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனிடையே நாளையதினம் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளைமறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை என்பன நடைபெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் சுகாதார பாதுகாப்புடன் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: