பயங்கரவாத தடை சட்டமானது நவீன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமான ஏற்பாடுகளை கொண்டதல்ல- அஜித் ரோஹன!

Sunday, November 29th, 2020

நடை முறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டமானது, தற்காலத்தில், நவீன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமான ஏற்பாடுகளை கொண்டதல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானியுமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதனால் அந்த சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் விதமாக பயங்கர்வாத எதிர்ப்பு சட்டமொன்றினை ( சி.டி.ஏ.) கொண்டுவர முயற்சிக்கப்பட்டதாகவும்,

எனினும் அது தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலமானது, தான் உள்ளிட்ட குழுவினரின் பரிந்துரைகள் பிரகாரம் வரையப்பட்ட சட்ட மூலத்தில் இருந்த பல விடயங்களை கொண்டிருக்கவில்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறான பின்னனியில் அந்த சட்ட மூலமும் கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் தினேஷ் குனவர்தனவினால் மீளப் பெறப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் விஷேடமாக ஆஜராகி சாட்சியம் வழங்கும் போதே அஜித் ரோஹன இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

அதன்படி நேற்று முன் தினம் ஆணைக் குழுவில் ஆஜரான அஜித் ரோஹனவிடம் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சாட்சியமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: