நோயாளர் எண்ணிக்கை பல மடங்கானால் யாழ்ப்பாணத்திலும் பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் – வைத்தியர் ஆதவன் எச்சரிக்கை!

Wednesday, August 18th, 2021

டெல்டா தொற்று ஒருவரிடமிருந்து ஆறு பேருக்கு பரவும் என வைத்தியர் ஆதவன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நோயாளர் எண்ணிக்கை பல மடங்கானால் நோயாளிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் டெல்டா திரிபு மிக வேகமாக பரவி வருகின்றது என்றும் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவைவிட டெல்டா இரண்டு மடங்கு வீரியமாக பரவக்கூடியது என்றும் தெரிவித்த அவர் ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு வைத்தியசாலைகளில் தொற்று நிலைமை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதனால் வைத்தியசாலைகளின் பராமரிக்கும் திறனுக்கு மேலாக நோயாளர்கள் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்தால் யாழ்ப்பாணத்திலும் இந்நிலை ஏற்படும் என்றும் இதனை நாங்கள் குறைக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு தனிநபரும் சில சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அதன்படி, வீட்டிலிருந்து அநாவசியமாக வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஏதாவதொரு காரணத்துக்காக வெளியில் வந்தால் போதிய சமூக இடைவெளியை பேணி எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை சரியாக அணிந்திருத்தல் அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: