நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள் – மின் நெருக்கடி தொடர்பில் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை!

Tuesday, February 1st, 2022

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது நிலவும் மின் நெருக்கடியால் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை – நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 3 ஆம் திகதிமுதல் செயலிழந்திருந்த குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு, நேற்றையதினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி மின் பிறப்பாக்கி மறுபடியும் செயலிழந்துள்ளது.

இதனால் தேசிய மின் கட்டமைப்பில் 270 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த அனுமதி இல்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: