நாட்டை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ அரசின் நோக்கமல்ல – வெளிநாட்டு முதலீடுகளே எமது இலக்கு – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சுட்டிக்காட்டு!

Sunday, February 26th, 2023

நாட்டை விற்பனை செய்தோ அல்லது குத்தகைக்கு விட்டோ நாட்டை முன்னேற்றும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாதென, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டை விற்பனை செய்வதன்றி முதலீட்டாளர்களை அழைத்து முதலீடுகளை மேற்கொண்டு அதன் மூலம் நாட்டை முன்னேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழுவின் இலங்கை வருகை தொடர்பில் வாசுதேவ நாணயக்கார எம்.பியினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் –

நாடுகள் தொடர்பில் சூழ்ச்சிகள் என்பது எல்லாக் காலங்களிலும் நிகழ்கின்ற ஒன்று. எனினும் அவற்றில் அகப்படாதவாறு நாம் எமது நாடு தொடர்பில் கவனம் செலுத்தி நாட்டை முன் கொண்டு செல்வதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசுதேவ நாணயக்கார எம்.பி. ஓர் ஊகிப்பை அடிப்படையாகக் கொண்டே மேற்படி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார். அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும், பொதுநலவாய கொள்கைகளை முறையாக நாம் கடைப்பிடித்தாலும் அதற்காக நாடுகளுடனான தொடர்பை தவிர்த்து செயற்பட முடியாது.

எமது நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நாம் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் பாதுகாப்புத் தொடர்பில் மட்டுமன்றி பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சம்பந்தமான தொடர்புகளையும் முன்னெடுத்துச் செல்வது அவசியமாகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: