நாட்டில் 200 வீதத்தினால் மருந்துப் பொருட்களின் விலைகள் உயர்வு!
Sunday, August 14th, 2016
தற்போது நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகள் 200 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக பேராசிரியர் சேனக பிபிலே ஞாபகார்த்த அமைப்பின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
விலைக்கட்டுப்பாடு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் கடந்த சில மாதங்களாக மருந்து வகைகளின் விலைகள் 200 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இவ்வாறு மருந்து வகைகளின் விலைகள் உயர்த்தப்படுவதனை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இதனால் மருந்து வகை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் பாரியளவில் லாபமீட்டி வருகின்றன. மருந்துகளின் விலை உயர்வினால் நோயாளிகள் பாரியளவில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இந்தப் பிரச்சினையிலிருந்து மக்களை மீட்பதற்கு அரசாங்கமோ அல்லது சுகாதார அமைச்சோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மருந்து விலைகள் குறைக்கப்படும் என கடந்த காலங்களில் சுகாதார அமைச்சு நடைமுறைச் சாத்தியமான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசிய மருந்துப் பொருள் கொள்கைகளை பின்பற்றாமை, கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன நிறுவனங்களுக்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்படாமை, மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யாமை என்பனவே இவ்வாறு மருந்துகளின் விலைகள் உயர்வடையக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|