நாட்டின் பொருளாதாரம் நவீனமயப்படுத்தப்படும் – பிரதமர்!

Monday, March 27th, 2017

நாட்டின் தற்போதைய சந்தைப் பொருளாதாரம், விரைவில் நவீனமயப்படுத்தப்படும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, பயங்கரவாதத்துக்கெதிரான சட்டம் போன்ற புதிய தொடர்ச் சட்டங்களும் கொண்டுவரப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக, யு.ஆர்.டி சில்வா பதவியேற்கும் வைபவம், நேற்று முன்தினம் இடம்பெற்ற போதே, இக்கருத்தைப் பிரதமர் வெளியிட்டார்.   “சந்தைப் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துவது, அரசாங்கத்தின் நோக்கமாகும். அதைத் தொடர்ந்து, நாட்டின் சட்டக் கட்டமைப்பை நவீனமயப்படுத்துவது, தேவையாக மாறும்.

“மே அல்லது ஜூன் மாதத்தில், புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைக் கொண்டுவருவோம். இது தொடர்பான சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன், இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். அதைத் தவிர, பயங்கரவாதத்துக்கெதிரன சட்டம், இறக்குமதிப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துதல் சம்பந்தமான சட்டம், நில வங்கியை உருவாக்குவதற்கான வழிகளை ஏற்படுத்தும் புதிய சட்டம், தொடர்மாடிக் குடியிருப்புகளின் உரிமை தொடர்பான சட்டம் ஆகியவற்றை நாம் கொண்டுவருவோம்” என்று அவர் தெரிவித்தார்.

ஆசியாவின் பழைமையான நீதிக் கட்டமைப்பாக உள்ள இலங்கையின் சட்டக் கட்டமைப்பு, ஆசியாவின் நவீனமான கட்டமைப்பாகவும் மாற வேண்டுமென, பிரதமர் தெரிவித்தார். அரசாங்கத்தின் 3 பிரிவுகளான நிறைவேற்று அதிகாரம், சட்டம், நீதி ஆகிய 3 பிரிவுகளும், இலகுவாக இணைந்து இயங்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், எனினும், அவசரமான நிலைமைகளில், நிறைவேற்று அதிகாரமும் சட்டப் பிரிவும், முடிவுகளை எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Related posts: