நாடு முழுவதும் மின்தடை – நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக இருக்கலாம் – சபையின் பொது முகாமையாளர் குற்றச்சாட்டு!

Friday, December 3rd, 2021

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 முதல் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினர் மின்சார மீள் இணைப்பு பணிகளை வேண்டும் என்றே இழுத்தடிப்பு செய்வதாக மின்சார சபை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதுடன் 300 மெகா வோட் மின்சாரம் மீள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் மின் தடை முழுமையாக சரி செய்யப்படும் என மின் பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) ஒன்று ஏற்கனவே இயக்கப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றனர்.

மின் தடை காரணமாக அதன் இரண்டு ஜெனரேட்டர்கள் தானாக செயலிழந்து விட்டன. ஆனால் மற்றைய ஜெனரேட்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதினால் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 132 kV டிரான்ஸ்மிஷன் லைன் அமைக்கப்பட்டு, நாடு முழுவதும் அதன் முறையான விநியோகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கொழும்பில் தேசிய வைத்தியசாலை உட்பட பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் ஏற்கனவே வழமைக்குத் திரும்பியுள்ளது.

மீதமுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts:


இலங்கைக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் பதவிளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்!
முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை - வர்த...
கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு - திருத்தங்கள் செய்யவும் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங...