தேவையேற்படின் காஸாவில் இருந்து இலங்கையர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Thursday, May 27th, 2021

காஸாவின் முன்னேற்றங்களை வெளிவிவகார அமைச்சு கவனித்து வருவதாகவும் தேவை ஏற்பட்டால் காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் கடந்த வெள்ளிக்கிழமைவரையுள்ள 11 நாட்கள் கடுமையான மோதலில் காஸாவில் குறைந்தது 242 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காஸாவின் முன்னேற்றங்கள் குறித்து தினசரி மதிப்பீடு செய்யப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஊடகமொன்றிக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் காஸா பகுதி மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கை சமூகத்தின் நல்வாழ்வை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை சமூகத்தின் அவல நிலையை இலங்கை அரசு கருத்திற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், தேவை ஏற்பட்டால் இலங்கையர்கள் பல கட்டங்களில் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

காஸாவிற்கு அருகில் ஒரு சில இலங்கையர்கள் வேலை செய்கிறார்கள். ஏனையவர்கள் இஸ்ரேலில் உள்ளனர். இலங்கை சமூகத்தின் சிறந்த நலனை அரசாங்கம் எப்போதும் மனதில் கொண்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் காஸா மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மறக்கப்படவில்லை என்றும் முழு நிலைமையும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: