தேசிய மின்கட்டமைப்புக்கு நுரைச்சோலை முழு பங்களிப்பு – மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Thursday, June 9th, 2022

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் சாடியுள்ளார்.

பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் தொழிற்சங்கங்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் அல்லது வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதற்கு சுதந்திரம் உள்ளதாக அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நிலைமை சரியான நேரத்தில் சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் மின்சார நுகர்வோர் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேநேரம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முழுமையான பங்களிப்பு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்மின் உற்பத்தி சிலவற்றின் தொழிற்பாடுகள் செயலிழந்திருந்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் கெனியோன் ஆகிய 5 நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன.

இதன்காரணமாக குறித்த நீர்மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்க பெறும் 300 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: