தேசிய இலக்குகளை அடைவதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Tuesday, March 8th, 2022

வரலாறு முழுவதும், பெண்கள், மனித முயற்சியின் ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக சமூக வளர்ச்சியின் போக்கில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தேசிய இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணையுமாறும் நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று சர்வதேச பெண்கள் தினம். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பெண்களைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில், பௌதிக மற்றும் மானிட அபிவிருத்தியின் இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அர்ப்பணிக்குமாறு சர்வதேச மகளிர் தினம், நம் அனைவரையும் அழைக்கிறது என்பதே உண்மை.

புத்தாக்கம், தொழிநுட்பம் மற்றும் ஊடகங்களால் வழிநடத்தப்படும் உலகமயமாக்கலுக்கு முன், அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்கு விரிவடைந்து வருகிறது.

சமூக, பொருளாதார மற்றும் குடும்பங்களை வலுப்படுத்த பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது.

எவ்வாறாயினும், நமது சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும், பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் பெண்களின் முழுமையான பங்கேற்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகிறது.

உண்மை, நீதி மற்றும் சமத்துவம் ஆகிய நற்பண்புகளின் அடிப்படையில் பெண்களை மதிக்குமாறு அழைக்கும் சிறந்த பௌத்த கலாசாரத்தால் போஷிக்கப்பட்ட ஒரு நாடே, இலங்கை ஆகும்.

பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு ஒரு தேசமாக அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமானது.

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, நமது நாட்டில் பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் தொடர்பில், சிறப்புக் கவனம் செலுத்தி – பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், அவை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும் – எமது அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பெண்களைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

“நாடும் தேசமும் உலகமும் அவளே” என்ற கருப்பொருளில் நடைபெறுகின்ற இந்த ஆண்டு மகளிர் தினத்தில் – தேசிய இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணையுமாறு நாட்டின் அனைத்து மக்களையும் தான் அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: