தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, August 1st, 2023

தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் மக்கள் இன்று பொது வைத்தியசாலைகளுக்குச் செல்லவே அச்சப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –

“2024, ஒகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

2048 இல் நாடு பாரிய முன்னேற்றமடையும் என்று இவர்கள் ஒரு கற்பனைக் கதையைக் கூறுகிறார்கள். தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை.

நாளை உயிருடன் வாழ்வோமா என்பதுதான் இவர்களின் எதிர்ப்பார்ப்பாகும். லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 3 அரை வயது குழந்தையொன்று, கிட்னி பாதிப்பினால் சிசிச்சைப் பெற்றுவந்து, மருந்து இல்லாத காரணத்தினால் மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தது.

போரதானை வைத்தியசாலை, ராகம வைத்தியசாலை போன்ற பல வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்து ஒவ்வாமையால் பலர் உயிரிழந்தார்கள்.

35 வீதமான குடும்பங்கள், இரண்டுவேளை உணவினை மட்டும்தான் உட்கொள்கிறார்க்ள என்று ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் ஒருவேளை மட்டும்தான் உண்கிறார்கள். உணவினை கட்டுப்படுத்தலாம். ஆனால், நோயாளிகளுக்கு மருந்துகளை கட்டுப்படுத்தி வழங்க முடியுமா?

கடந்த 6 மாதங்களில் மட்டும் 64, தரமற்ற மருந்துகளை அரசாங்கம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி, மீண்டும் அவற்றை திருப்பியெடுத்துள்ளது.

இதனால், மக்கள் இன்று பொது வைத்தியசாலைகளுக்குச் செல்லவே அச்சப்படுகிறார்கள். வைத்தியசாலைக்கு சென்றாலே உயிரிழந்துவிடுவோமோ எனும் அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்று அரசாங்கம் கதைகளைக் கூறிவருகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: