தரம் ஒன்றுக்கான மாணவர்களை உள்வாங்கும் சுற்று நிருபத்தில் திருத்தம்?

Monday, March 27th, 2017

தரம் ஒன்றுக்கான மாணவர்களைச் சேர்க்கும் சுற்று நிருபத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இந்தச் சுற்றுநிருபத்தில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் குழு ஒன்றை, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கல்வி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளைக் கொண்டமைந்துள்ள இந்தக் குழுவில் சில பிரபல பாடசாலைகளின் அதிபர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.சுற்று நிருபத்தில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் குறித்து இந்தக் குழு கவனம் செலுத்தவுள்ளது.

குறிப்பாக வதிவிடத்தை உறுதி செய்வதற்காக சமர்ப்பிக்குமாறு கோரப்படும் ஆவணங்களுக்காக நேர்முகத் தேர்வின் போது வழங்கப்படும் புள்ளிகள் நிலையான முறைமை பின்பற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணங்களுக்கு மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் மாறுபட்ட புள்ளிகள் வழங்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணங்களுக்கு நிலையான ஓர் புள்ளி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென அதிபர்கள் கோரியுள்ளனர்.

சுற்று நிருபத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஜூன் மாதம் தரம் ஒன்றுக்காக பாடசாலை மாணவர்களை சேர்ப்பது குறித்த விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

Related posts: