தபால்துறை வேலை நிறுத்தத்தால் வறியோர், முதியோர் பெரும் பாதிப்பு!

Sunday, June 24th, 2018

தபால்துறை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் வறியோர்களும் முதியோர்களும் அங்கவீனர்களும் அவதியுறுகின்றனர். பொதுசன உதவிப்பணம், முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு, விவசாயிகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு, அங்கவீனர்களுக்கான விசேட கொடுப்பனவு என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றில் மிகவும் நீண்ட நாட்களுக்கு அலுவலகங்களை திறக்காமல் முன்னெடுக்கப்படும் இத் தொழிற்சங்கப் போராட்டம் எந் நோக்கத்திற்காக நடத்தப்படுகின்றது என்பதை பொது மக்களும் வெளிமாகாண ஊழியர்களும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். தபால்துறை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஜீன் மாத சம்பளத்தைப் பெறமுடியாத நிலை நிலவுவதுடன் அத்திணைக்களத்தில் கடமைபுரியும் நாட்கூலி, அமைய அடிப்படையிலான கடமைபுரியும் உத்தியோகத்தர்களும் வேலைக்கு சமுகமளித்த காலப்பகுதிக்கான சம்பளத்தைப் பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை நிலவி வருகின்றது.

தபால் நிலையங்கள் கடந்த 12 நாட்களாக திறக்கப்படாமை காரணமாக தபால் நிலைய வளாகங்கள் குப்பை கூழங்களால் நிரம்பியுள்ளன. மிக விரைவாக இத் தொழிற்சங்க போராட்டம் நிறுத்தப்பட வேண்டுமென மக்கள் கோருவதுடன் இதன் பின்னணியில் சில அரசியல்வாதிகளும் உள்ளதாக மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Related posts: