தனுஷ்கவுக்கு பிணை மறுப்பு – இலங்கை கிரிக்கெற் சபையும் அறிவிப்பொன்றை வெளியிட்டது!

Sunday, November 6th, 2022

அவுஸ்திரேலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தொடர்பில்  31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவர் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது, முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி, சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்பதாக சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணொருவரையே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பாலியல் குற்றப்பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கிழக்கு காவல் பிராந்திய கட்டளைப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிட்னி நீதிமன்றம் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் உத்தரவுகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும், தனுஷ்க குணதிலக்க மீதுான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயினும், அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து இலங்கை கிரிக்கெட்டும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதது.

000

Related posts: