தனியார்துறை பேருந்து சேவையை வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டேன் – போக்குவரத்து அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராச்சி உறுதி!

Friday, October 15th, 2021

தனியார்துறை பேருந்து சேவையை வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார வழிமுறைகளுக்கமைய இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

நாட்டு மக்களுக்கு தனியார்துறை பேருந்து சேவை மகத்தானது. இருப்பினும், தற்போதைய கொவிட் தொற்று பரவல் காரணமாக, இலங்கையில் தனியார் பேருந்து சேவை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த பேருந்து சேவையை பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையும் ஆகும். எனவே, தனியார் பேருந்து சேவையை மீண்டும் கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோள் ஆகும்.

அத்துடன் தனியார் பேருந்து சேவை வீழ்ச்சியடைய நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அதனால்தான் பேருந்து சேவையில்; ஈடுபட்டுள்ள தனியார் துறையுடன் இணைந்து, நிவாரணத் திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆரம்பிப்பதில் போக்குவரத்து இராஜரங்க அமைச்சர் திலும் அமுனுகம முக்கிய பங்கு வகித்துள்ளார்.

தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள், மாகாணங்களுக்குள் மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், கொவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக இந்த பேருந்துகளின் வருமானம் குறைந்துள்ள காரணத்தினால், அவற்றின் பராமரிப்பு நடவடிக்கைகளைக்கூட மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது.

இதனால், டயர் தயாரிப்பாளர்கள், மசகு எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் வாகன உதிரிப் பாக விற்பனையாளர்கள் ஆகியோர் பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த நிவாரணத் திட்டத்தை வழங்க நிதி பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிவாரணத்திட்டத்தின் கீழ், மீண்டும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற பேருந்துகளுக்கு தேவையான டயர் மசகு எண்ணெய் மற்றும் வாகன உதிரிப்பாகங்களை சந்தை விற்பனை விலையிலும் குறைந்த, விசேட சலுகை விலையில் வழங்குவதாக போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அந்த தனியார் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

எனவே, இந்த நிவாரனத் திட்டத்தின் கீழ், பஸ் உரிமையாளர் ஒருவர் சுமார் 100 ஆயிரம் ரூபாய் நிவாரணமாகப் பெறுவார் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: