தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் – வடக்கு மக்களுக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவுறுத்து!

Tuesday, September 7th, 2021

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும்  அலட்சியமாக செயற்படாதீர்கள்  என பொதுமக்களிடம் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய  வட மாகாண கொரோனா  நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாணத்தில் தற்போது கொவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த அடிப்படையிலே 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான  தடுப்பூசிகள் தற்போது  வழங்கப்பட்டு வருகின்றது

அத்துடன் வடக்கு மாகாணத்தினை  பொறுத்தவரையில் 30 வயதுக்கு மேற்பட்ட 6  இலட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் இருக்கிறார்கள். அவர்களில்  முதலாவது டோஸ்  தடுப்பூசி 5 இலட்சத்து 58 ஆயிரத்து 131 பேருக்கு  இன்று வரை வழங்கப்பட்டுள்ளது

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோரின் சனத்தொகையில்  85 சதவீதமானோருக்கு  முதல் கட்ட  தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இன்று வரை இரண்டாவது கட்ட தடுப்பூசி இரண்டு இலட்சத்து 94 ஆயிரத்து அறுபத்தி ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டுள்ளது இது முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் சனத்தொகையில் 45 வீதமனோருக்கு வழங்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்களில் இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகிறது

அத்துடன் நேற்றுமுதல் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் இரண்டாவது கட்ட  தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

பெரும்பாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். யாழ்ப்பாண  மாவட்டத்தை எடுத்துக்கொண்டால்  கிட்டத்தட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும்  50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் இதில் ஏறத்தாள 28 ஆயிரம்  பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.

அண்மையில் 60 வயதிற்கு மேற்பட்டோரின் இறப்பு வீதமானது அதிகரித்துச் செல்கின்றது  அதிலும் தடுப்பூசி எதுவும் பெறாதவர்களே அதிகளவில் இறப்புகளை சந்திக்க நேரிடுகின்றது அதன்காரணமாக  60 வயதுக்கு மேற்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

இதன்மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோரின்  இறப்புகளை குறைத்துக் கொள்ள முடியும். இவை யாவும் நிறைவு செய்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நிறைவடைந்த பின்னர் 20 வயதுக்கும் 30 க்கும் இடைப்பட்டோருக்கான  தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது ஆரம்பிக்கவுள்ளோம்

இந்த பெருந்தொற்று காலப்பகுதியில் இறப்புகளைத் தடுப்பதே எமது நோக்கமாக காணப்படுகின்றது. இறப்புகளைத் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் கட்டாயமாக தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள வேண்டும் .

சிலர் கூறுகிறார்கள் தடுப்பூசி பெற்றவர்களுக்கும் தொற்று ஏற்படுகின்றது என்று. எனினும் தடுப்பூசி பெற்றவர்களுக்கு தொற்று ஏற்படும்போது அவர்களுக்கு நோயின் தாக்கம் தன்மை குறைவாக காணப்படுகின்றது. அத்தோடு தடிமன் காய்ச்சலுடன்  தொற்று வந்து அந்த நோய் மாறிவிடும்.

ஆனால் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அது இறப்பினை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. எனவே அனைவரும் இந்த தடுப்பூசியை பெறுவது அவசியமாகும்.

இதேநேரம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் சிலர் அலட்சியமாக செயற்படுகின்றார்கள் அதாவது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுகின்றார்கள்

மக்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பெற்றுக் கொண்டாலும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே தடுப்பூசி பெற்றுக் கொண்டாலும் தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக இறுக்கமாக பின்பற்ற வேண்டிய அவசியமாகும்.

அத்தோடு கட்டாயமாகமுக கவசம் அணிதல் வேண்டும் என்பதுடன் இயலுமானவரை பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்வதுடன் ஒன்று கூடுதல்களையும் தவிர்த்தல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: