தங்களுக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Saturday, February 10th, 2024

உலகின் பலமான நாடுகள் தங்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தங்களுக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 2050ஆம் ஆண்டளவில் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று ஆரம்பமான நிலையில் இன்றையதினமும் நடைபெறுகின்றது

இந்த மாநாட்டை ‘நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி’ என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் எனவும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைவர்களினால் மாத்திரமே செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: