ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை – எம்.வீ எக்ஸ் – பிரஸ் பர்ள்” கப்பலினால் சமுத்திர சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த துறைசார் அதிகாரிகள் விசேட நடவடிக்கை!

Thursday, May 27th, 2021

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான எம்வீ எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பலின் மூலம் சமுத்திர சுற்றாடலுக்கும் கடற்கரைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரையின் பேரில் சமுத்திர சுற்றாடல் அதிகாரசபை, பாதுகாப்புத்துறை மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து விரிவான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கப்பலை சூழவுள்ள கடற்பகுதியில் எண்ணெய் பரவக்கூடிய நிலை ஏற்பட்டால் தற்போதைய காலநிலைக்கு முகங்கொடுத்து அதனை குறைப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இத்தகைய அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கு உலகின் வேறு நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ள பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் கடற்படை மற்றும் ஏனைய துறைகள் இணைந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கப்பல் கடந்த 20 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் வைத்து தீப்பற்றியது. நைட்ரிக் அமிலம் இரசாயனப் பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு கப்பல் இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு பயணித்தது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் சமுத்திர, சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தற்போது குறித்த கடற்பகுதியை சூழவுள்ள நீரின் மாதிரியை பரிசோதனைக்குட்படுத்தியுள்ளது. மேலும் கப்பலுக்கு சொந்தமான நிறுவனம், காப்புறுதி நிறுவனம் மற்றும் ஏனைய தரப்புகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள கடற்படை, விமானப்படை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரையும் பாராட்டிய ஜனாதிபதி கடற்பகுதியின் சுற்றாடல் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: