ஜனவரி 1 முதல் இலங்கை வரும் அனைத்துப் பயணிகளும் விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்படுகிறது புதிய நடைமுறை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Thursday, December 16th, 2021

ஜனவரி 1 ஆம் திகதிமுதல் இலங்கைக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தமது கைபேசியில் சுகாதார நிலையைக் குறிப்பிடும் QR குறியீட்டை உள்ளிடுவது அல்லது அதன் பிரதியை எடுத்து வருவதை கட்டாயமாக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றுலா அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, விமான நிலையத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்..

எனினும், ஒரு பயணி அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அவர் அல்லது அவள் படிவத்தை பூர்த்தி செய்து பொது சுகாதார பரிசோதகரிடம் சமர்ப்பித்து விமான நிலையத்தை விட்டு வெளியேறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில் –

“இலங்கைக்கு வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும், இலங்கைக்கு வந்தவுடன் அவர்களின் உடல்நிலையை தெரிவிக்கும் படிவத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். ஆனால் நாங்கள் பார்த்தது என்னவென்றால், படிவத்தை பூர்த்தி செய்து விமான நிலையத்தில் உள்ள பொது சுகாதார பரிசோதகரிடம் காட்ட சென்றபோது, நீண்ட வரிசை இருந்தது.

எனவே, இலங்கைக்கு வரும் அனைத்துப் பயணிகளும் தம்மிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், அல்லது இலங்கைக்கு வருவதற்கு முன் அதன் அச்சுப்பொறியைக் கொண்டு வருமாறும், QR குறியீட்டைக் கொண்டு வருமாறும் சுகாதார அமைச்சு சுற்றுலா அமைச்சிடம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், யாராவது அவ்வாறு செய்யத் தவறினால், நாங்கள் அவர்களை ஒருபோதும் நிராகரிக்க மாட்டோம். அவர்கள் சம்பந்தப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து பொது சுகாதார ஆய்வாளர்களிடம் ஆவணங்களை காட்டலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: