சுற்றுலா விசாவில் தொழில் தேடி வெளிநாடு சென்றவர்க்ள கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு!

Wednesday, January 4th, 2023

சுற்றுலா விசாவின் கீழ் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து இலங்கையர்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஓமானில் சிக்கித் தவித்து தற்போது ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை 08 பெண்களைக் கொண்ட முதலாவது குழு 2022 டிசம்பர் 24 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததாகத் தெரிவித்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், 6 பெண்களைக் கொண்ட இரண்டாவது குழு இன்று நாட்டை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சுற்றுலா விசாவின் கீழ் சட்டவிரோதமாக ஓமன் நாட்டுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்ற 18 பெண்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வேலை செய்யும் இடங்களை விட்டு ஓடிய பெண்கள் ஓமானின் தொழிலாளர் அமைச்சால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை தெரிவித்துள்ளது.

அவர்களின் முதலாளிகளிடமிருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பின்னர் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக ஓமானில் வசிப்பதாகக் கருதப்படும் குழுவைத் திருப்பி அனுப்புவதற்கான டிக்கெட்டுகளின் விலையை அவர்களின் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் ஏற்க வேண்டும் என பணியகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: