சுன்னாகம் நீர் மாசு விவகாரம்: வடமாகாண சபைக்கு 1 மாதகால அவகாசம்!

Thursday, February 2nd, 2017

சுன்னாகம் பகுதியில் இயங்கிவந்த மின்னுற்பத்தி  நிலையத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பாக எதிர்ப்புகள் இருப்பின், அவற்றை ஒருமாத காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண சபைக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன், குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை நிறுத்துமாறு, நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட காலக்கெடு, எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும், நீதிமன்றம் அறிவித்தது.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பில், சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில், செவ்வாயன்று (31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, நீதிமன்றத்தினால் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இந்த வழக்கு விசாரணையை, எதிர்வரும் மே 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இந்த மின்னுற்பத்தி நிலையம் காரணமாக, கிணறுகளில் ​எண்ணெய் மற்றும் கிரீஸ் போன்றன கலப்பதால், குடிநீர் மாசடைவதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாரிப்பு ஏற்படுகிறது எனச் சுட்டிக்காட்டி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அறநெறி ஆய்வு நிலையத்தின் பிரதானி பேராசிரியர் ரவீந்திர காரியவசத்தால், இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரையில், குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை நிறுத்திவைக்குமாறு, உயர்நீதிமன்றத்தினால், ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.

நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் புவனெக்க அளுவிஹார ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், செவ்வாயன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, அந்த உத்தரவு, மே மாதம் வரையில் நீடிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதியான வடமாகாண சபை சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஈ.கனகேஸ்வரன், இந்த மனு தொடர்பில் தங்களுக்கு எதிர்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, அவற்றை ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்குமாறு, நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

8541

Related posts: