சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிவந்த வர்த்தக நிலையங்கள் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நடவடிக்கை!
Sunday, December 2nd, 2018யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் எடுத்துக் கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் பயனாக ஒரு நாளில் சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் இயங்கி வந்த மூன்று தேநீர்க் கடைகள், நான்கு பழக்கடைகள், வெதுப்பகம், பிரபல்யமான வர்த்தக நிலையம் ஆகியன அகப்பட்டன.
பொதுமக்களின் முறைப்பாட்டை அடுத்து யாழ் மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்ஜீவன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு அருகாமையிலுள்ள தேநீர்க் கடைகளையும் பழக்கடைகளையும் சோதனைக்கு உட்படுத்தியபோது மூன்று தேநீர்க் கடைகள் சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் இயங்கி வந்தமையையும் 4 பழக்கடைகளில் பழுதடைந்த பழங்கள், திகதி காலாவதியான பொருள்கள், சுட்டுத்துண்டில்லாத பொருள்கள் ஆகியன களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை திகதி காலாவதியான ஜோக்கட் வழங்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள சுகாதாரத் திணைக்களத்துக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள பிரபல்யமான வர்த்தக நிலையத்தை சோதனைக்கு உட்படுத்திய சுகாதாரப் பரிசோதகர் திகதி காலாவதியான ஜோக்கட், குளிர்பானங்கள், ஐஸ்கிறீம் ஆகியன அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
அதேநேரம் கஸ்தூரியார் வீதியிலுள்ள பிரபலமான வெதுப்பகம் ஒன்றைச் சோதனைக்கு உட்படுத்திய பரிசோதகர் திகதி காலாவதியான பாண், சுட்டுத்துண்டில்லாத பணிஸ், கேக் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் திகதி காலாவதியான நிறமூட்டி வகைகள் என்பன இருந்தமையை அவதானித்துள்ளார்.
இதையடுத்து குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் கடந்த 28 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அனைவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டமையைத் தொடர்ந்து மூன்று தேநீர்க் கடைகளையும் மூடிச் சீல் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், நான்பு பழக்கடைகளின் உரிமையாளர்களுக்கு 16 ஆயிரம் ரூபாவும், பிரபல வர்த்தக நிலைய முகாமையாளருக்கு 16 ஆயிரம் ரூபாவும் தண்டம் விதித்தார். தேநீர்க் கடைகள் பற்றி சுகாதாரப் பரிசோதகரின் அறிக்கை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பின் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வெதுப்பக உரிமையாளர் மன்றுக்குச் சமூகமளிக்காமையினால் அவருடைய வழக்கு விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவருக்கு எதிராகச் சுகாதாரச் சீர்கேடு சம்பந்தமாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் விசாரணைக்காக நிலுவையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|