சுகயீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் – கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் வலியுறுத்து!

Thursday, February 4th, 2021

சுகயீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் விஜேசூரிய, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்தது. அந்த குழந்தையின் மரணத்திற்கு பிரதான காரணம் தாமதமாக அழைத்து வந்தமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழந்தை 11 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் கொண்டு வரும் போதே ஆபத்தான கட்டத்தில் இருந்தமையினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தோம். எனினும் எவ்வளவு முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை.

குழந்தையின் பெற்றோர் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களாவர். அவர்கள் குழந்தை நோயினால் தீவிரநிலையடைந்த பின்னரே அழைத்து வந்தார்கள்.

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இதுவரையில் 150க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே பெற்றோர்களே, சுகவீனம் அடைந்த குழந்தைகளை தாமதமின்றி அழைத்து வந்தால் நாங்கள் காப்பாற்றி விடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: