சீரற்ற காலநிலையால் இலங்கையில் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் !

Saturday, March 26th, 2016
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
மே மாதம் வரையில் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகூடிய வெப்பநிலை நிலவுகின்றது. வெப்பநிலை அதிகரிப்புடன் வைரஸ்களின் தாக்கமும் அதிகரித்திருப்பதனால் சிறுவர்கள், மற்றும் கர்ப்பிணிகள் விரைவில் நோய் தாக்கங்களுக்கு உள்ளாக நேரிடுமென்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வீசும் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் இடைப்பருவப் பெயர்ச்சி மழையில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியன காரணமாகவே நாட்டின் வெப்பநிலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தள்ளது.
காலநிலையில் ஏற்பட்டிருக்கும் இத்திடீர் மாற்றம் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள கடலும் வழமையிலும் அதிகமான வெப்பநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் வான்வெளியில் உயர் அடுக்கில் வீசும் காற்றில் போதுமான ஈரப்பதன் இல்லாமையினாலும் மேகங்கள் உருவாகும் நிலை தடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக இக்காலப்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் வெப்பநிலை நிலவுவது வழமையாகும். எனினும் இம்முறை இந்தியாவில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வெப்பநிலை சற்று குறைவாகவே நிலவுவதாகவும் அவதான நிலையம் கூறுகின்றது. ஏப்ரல் நடுப்பகுதியளவில் இடைப்பருவப்பெயர்ச்சி மழை காரணமாக மாலை வேலைகளில் மின்னலுடன் கூடிய அடைமழை பெய்ய வாய்ப்புண்டு. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் வெப்பநிலை தற்காலிகமாக குறைவடையலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக பொதுமக்களை அறிவுறுத்தும் பொருட்டு பல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதிக வெப்பநிலைக் காரணமாக வழமையிலும் கூடுதலான நீர் உடம்பிலிருந்து வெளியேறும் என்பதனால் சிறுவர்கள், கார்ப்பிணித்தாய்மார் உள்ளிட்ட அனைவரும் அடிக்கடி நீர் அல்லது நீராகாரங்களை பருக வேண்டும்.
களைப்பு ஏற்படும் வகையில் திறந்தவெளியில் பயி்ற்சிகள் செய்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவில் பழங்களை உட்கொள்ள வேண்டும். வெப்பநிலை அதிகரிப்புடன் வைரஸ் தாக்கமும் அதிகரிக்கும் என்பதனால் வைரஸ் தொற்றுக்களை தவிர்க்கும் வகையில் முற்காப்புடன் செயற்பட வேண்டும். குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார் இதுபோன்ற வைரஸ் தொற்றுக்கு உள்ளானால் தாய், சேய் இருவரும் பாதிக்கப்படுவதுடன் மருந்துகளை உட்கொள்வதும் பொருத்தமாகாது என்பதனால் அதிக சனநடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதனை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அதிகரித்துள்ள உஷ்ண நிலைக் காரணமாக சிறுவர்களும் குழந்தைகளும் பெருமளவில் கை,கால்,வாய் நோய்களுக்கு ஆளாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: