சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனம் – மக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கான உணவும் கையிருப்பிலுள்ளதாக அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021

அத்தியாவசிய பொதுமக்கள் சேவைகள் சட்டத்தின் கீழ் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார்.

இதனடிப்படையில் துறைமுகங்கள் அதிகார சபை நிறைவேற்ற வேண்டிய அனைத்து சேவைகள், பெட்ரோலிய உற்பத்தி, திரவ வாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருள் விநியோகம், ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து பொது போக்குவரத்து சேவைகள், பொது சேவைகளை நடத்திச் செல்வதற்கு தேவையான பராமரிப்பு மற்றும் நடவடிக்கை பிரிவுகள் ஆகியன அத்தியவாசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட களப்பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் சேவைகளும் அத்தியாவசிய சேவைகளுக்குள் அடங்குகின்றன.

இதேநேரம் இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள் , காப்புறுதி சேவைகள், சுகாதார சேவையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், சதொச மற்றும் கூட்டுறவு துறைகளுடன் தொடர்புடைய சேவைகளையும் ஜனாதிபதி அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானியில் அறிவித்துள்ளார்.

இதனைத் தவிர, மாகாண சபைகளின் கீழ் இயங்கும் அரச அலுவலகங்களால் நிறைவேற்றப்படுகின்ற சேவைகள் மற்றும் தபால் சேவையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

இதேநேரம் மக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கான தேவையான உணவு கையிருப்பு அரசாங்கத்திடம் உள்ளதாகவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபமீட்டும் நோக்கில் நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேநேரம் மக்களுக்கு எதிரான இந்த முயற்சியை முறியடிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் தொடர்பிலான சரத்துக்களை கடந்த திங்கட்கிழமை தொடக்கம் அமுல்படுத்தியதாகவும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் கூறியுள்ளார்.

அத்துடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களை கைப்பற்றி, நியாயமான விலையில் விநியோகிப்பதற்காக சதொச உள்ளிட்ட அரச நிறுவனங்களிடம் கையளித்தன் மூலம் செயற்கையாக உணவுத் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சியை முறியடிக்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

சீனி மற்றும் அரிசிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன நேற்று தெரிவித்தார்.

அதன்படி, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 130 ரூபா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொதிசெய்யாமல் விற்கப்படும் ஒரு சீனியின் அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே, கீறி சம்பா அரிசி கிலோ ஒன்றுக்கு 136 ரூபாவும்,  ஒரு கிலோ வெள்ளை சம்பா அரிசிக்கு 101 ரூபாவும்,  ஒரு கிலோ வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக101 ரூபாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளை (நாடு) அரிசி கிலோவொன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 94 ரூபாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள் நுகர்வோர் விவகார அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: