சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, January 11th, 2022

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்றுறைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்குமென்று, அதன் உப தலைவர் சிக்ஷின் ஷென் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜடபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து உரையாடும் போதே, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியோடு தற்போது இந்நாட்டில் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் வெற்றிக்கு, சிக்ஷின் ஷென் பாராட்டுகளையும் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அரச கூட்டுத்தாபனங்கள் பலவற்றை மறுசீரமைப்பதற்கான நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்த்துள்ளது என்றும் சிக்ஷின் ஷென் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால், இலங்கைக்கு இவ்வாண்டில் 786 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வங்கியின் உதவியின் கீழ், இலங்கையில் தற்போது 27 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டை, 68 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பங்குபற்றுதல்களுடன் இவ்வாண்டு மே 02 முதல் 05 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டிய வணிக மாநாடுகள் உள்ளிட்ட பல செயற்பாடுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகள் 5,000 பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனாவுக்கு பிந்தைய உலகின் காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் பசுமைப் பொருளாதாரம்” என்ற தொனிப்பொருளில், இம்முறை மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையானது, கொரோனா தொற்றுப் பரவலுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை வெற்றிகொண்டுள்ளமை, அரச சுகாதாரப் பொறிமுறையின் திறன் போன்றன, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவரது பாராட்டுகளுக்குப் பாத்திரமாகின என தெரிவித்துள்ள ஜனாதிபதி தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்புக்கு, அரசாங்கத்தின் சார்பிலும் நாட்டு மக்கள் சார்பிலும், நன்றியும் தெரிவித்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: