சாவகச்சேரி பிரதேத்தில் இரு சுற்றுலா விரைவில் அமையும்!
Wednesday, March 1st, 2017
சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கச்சாய் துறைமுகம் எழுதுமட்டுவாழ் பொதுச் சந்தைப் பகுதி என்பன சுற்றுலா மையங்களாக மாற்றப்படவுள்ளன. இதற்குரிய நிதியை நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சு வழங்கவுள்ளது.
கொடிகாமம் பொதுச்சந்தை விற்பனைப் பிரிவுகளை நவீன முறையில் அமைக்க 50 மில்லியன் ரூபாவும், கச்சாய் துறைமுக அபிவிருத்திக்கு 8மில்லியன் ரூபாவும், மாதிரிக் கிராமத் திட்டத்தின் கீழ் எழுது மட்டுவாழ் சந்தை அமைந்துள்ள பகுதி அபிவிருத்திக்கு 5மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது. கச்சாய் துறைமுகத்தை இறங்குதுறையாக மாற்றி அதை அண்டியுள்ள 7ஏக்கர் காணி சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளது. துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் கடலுக்குள் காணப்படும் சாளம்மன்தீவு, காக்கைத்தீவு என்பவையும் சீரமைக்கப்பட்டு சுற்றுலா மையங்களாக மாற்றப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் கச்சாயிலுள்ள இளவரசி குளமும், அதனுடன் இணைந்த கிணறு, சேதமடைந்துள்ள கோட்டை பகுதி என்பனவும் சுற்றுலா மையத்திற்குள் உள்வாங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எழுதுமட்டுவாழ் தெற்கில் மீள்குடியமர்ந்த மக்களின் வேண்டுகோளுக்கு அமைய 5 மில்லியன் ரூபா செலவில் பொதுச்சந்தை அமைக்கப்பட்டது. நவீன வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட பொதுச்சந்தை தற்போது பாவனையற்று உள்ளது. அதை 5 மில்லியன் ரூபா செலவில் நவீனப்படுத்தி பண்டைய கால திண்ணைப் பாடசாலை உள்ளிட்ட பண்டைய கல்வி நடவடிக்கைகளை நினைவூட்டும் குடில்கள் அமைக்கப்படவுள்ளன.
ஒன்றரை ஏக்கர் காணியில் சுற்றுலாப் பயணிகள் தங்கக்கூடியவாறு கட்டங்களும் அமைக்கப்படவுள்ளன. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறந்த பொதுச்சந்தையாக கொடிகாமம் பொதுச்சந்தை மாறியுள்ளது. அங்குள்ள விற்பனைப் பிரிவுகளை நவீன மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது குடிதண்ணீர் வசதி, வடிகால் அமைப்புத்திட்டம் என்பவையும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|