சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு பிரதமர் தலைமையில் 10 நினைவு முத்திரைகள் வெளியீடு!

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் தெங்கு குழுமத்தினால் 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 25 ஆவது கூட்டத்தின் போது முதல் முறையாக செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி உலக தெங்கு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
தென்னை பயிர்ச்செய்கைக்கான ஆராய்ச்சிக்காக 1929 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் ஒரே நிறுவனம் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனமாகும்.
இம்முறை தெங்கு தினத்தை முன்னிட்டு இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டிருந்த பல வேலைத்திட்டங்களை கொவிட் தொற்று நிலைமை காரணமாக எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தபால் திணைக்களத்துடன் இணைந்து இவ்வாறு 10 விசேட நினைவு முத்திரைகளை வெளியிடுவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாகும். தென்னையுடன் தொடர்புடைய பல்வேறு உற்பத்திகள் பத்தினை சித்தரிக்கும் வகையில் இந்நினைவு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்போது பதில் பிரதி தபால்மா அதிபர் துசித ஹூலங்கமுவ முதல் நாள் உறை மற்றும் நினைவு முத்திரைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கினார்.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான, மேலதிக செயலாளர் D.S.விஜேசேகர, தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப பரிமாற்ற அதிகாரி திருமதி.ஹேமமாலா பொன்சேகா, பதில் பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ, முத்திரை பணியகத்தின் பணிப்பாளர் சாந்த குமார மீகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|