சம்பள உயர்வினை கோரி முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, February 17th, 2022

தமக்கான அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கக் கோரி முல்லைத்தீவு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய முன்பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கான சம்பள உயர்வினை கோரி கவனயீர்ப்பினை முன்னெடுத்து முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

அந்த மனுவில்,

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலான சேவை நோக்கில் கற்பித்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். பல தடவைகள் கொடுப்பனவு தொடர்பான வேண்டுதல்களால் வட மாகாணசபை முதற்கட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவாக மூவாயிரம் ரூபாவும், இரண்டாம் கட்டமாக நான்காயிரம் ரூபாவாகவும் தற்போது ஆறாயிரம் ரூபாவாகவும் வழங்கி வருகின்றார்கள்.

முன்பள்ளி ஆசிரியர்கள் பலர் பெண் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாகவும் உள்ளார்கள்.

இன்றைய காலகட்டத்தில் இந்த கொடுப்பனவு எமது வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே எமது நிலைமையினை கருத்தில்கொண்டு சம்பள உயர்வினையும் நிரந்தர நியமனத்தினையும் வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முன்பள்ளி ஆசிரியர்கள் அடிப்படை தகமைகளுடன் டிப்ளோமாவினையும் பூர்த்தி செய்துள்ளார்கள். ஆகவே மிக விரைவில் எமக்கு நியமனத்தினை வழங்க ஆவண செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: