சமூக வலைத்தள பதிவுகளை கண்காணிக்கிறதா வருமான வரித்துறை?!

Tuesday, July 16th, 2019

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் தனிநபர்கள், தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுகிறார்கள். அதிகசெலவில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதையும், ஆடம்பர பொருட்கள் வாங்கியதையும் கூட புகைப்படங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அவர்கள் வருமான வரி கணக்கில் இதற்கான வருவாயை காட்டுகிறார்களா? வரி செலுத்துகிறார்களா? என்பதை அறிய சமூக வலைத்தள பதிவுகளை வருமான வரித்துறை கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து வருமான வரித்துறையின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சி.பி.டி.டி.) தலைவர் பி.சி.மோடியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது: அது தவறான தகவல். நாங்கள் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தனிநபர்களின் வெளிநாட்டு பயணம் மற்றும் பண பரிமாற்றம் குறித்து நம்பகமான அமைப்புகளிடம் இருந்து நாங்கள் ஏற்கனவே தகவல்களை பெற்று வருகிறோம்.

வங்கிகள், பரஸ்பர நிதியங்கள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள், சார்பதிவாளர்கள் போன்ற மூன்றாம் தரப்பிடம் இருந்து தகவல்களை பெற்று வருகிறோம்.

இவற்றின் அடிப்படையில், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் 18 வகையான பண பரிமாற்றங்களில் ஏதேனும் ஒன்றை செய்திருந்தாலும், அந்த நபருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் சேவையையும் தொடங்க உள்ளோம். “நீங்கள் இந்த பரிமாற்றம் செய்துள்ளீர்கள். ஆகவே, உங்கள் வருமான வரி கணக்கு தாக்கலில் இதை குறிப்பிட வேண்டும், அதற்கு தேவைப்பட்டால் வரி செலுத்துங்கள்” என்று அதில் தெரிவிப்போம்.

சிக்கலின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஏதுவாக இதை செய்கிறோம். கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு ஒரு கணக்காளர் போன்ற வேலையை வருமான வரித்துறை செய்கிறது.

எனவே, வருமான வரி கணக்கு தாக்கலுக்கு முன்பு, இத்தகைய பரிமாற்றங்களை குறிப்பிடுவதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்குமாறு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறோம். இல்லாவிட்டால், கணக்கில் முரண்பாடுகள் எழக்கூடும்.

அதுபோல், வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவழிப்பவர்கள், ஓராண்டில் வங்கிக்கணக்கில் ரூ.1 கோடி செலுத்துபவர்கள், ஓராண்டில் ரூ.1 லட்சத்துக்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு செலவழிப்பவர்களின் வருமானத்துக்கு வரி போடக்கூடாதா? வரி விதிப்புக்கு கட்டுப்படும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் இதை செய்கிறோம். இவ்வாறு பி.சி.மோடி கூறினார்.

Related posts: